baner460

Saturday, October 30, 2010

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான  கைத்தடி ஒன்று மிதந்து வந்தது.அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.ஆனால்  அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.
 
கரைக்கு வந்த அவன்  அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.அங்கு இருந்த ஒரு துறவி,''அய்யா,நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?''என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார்,''அய்யா,உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது.இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்?அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''
 
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை.பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை.இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை.ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம்.நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.
             
 ----இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

No comments:

Post a Comment

Feel Free to comment and do bookmark